Thursday 11 March 2010

"ஆய்த எழுத்து" காரணப்பெயரின் தோற்றம்....

தமிழில் ஆய்த எழுத்தாக ‘ஃ’ உள்ளது. அது எப்பொழுது தோன்றியது? அதற்கு ஏன் ஆய்த எழுத்து என்று பெயர் வந்தது?

உலகில் பேச்சு மொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. ‘அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. ‘அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து.

கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனி நிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர்.

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் தனிநிலை எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.

வழக்காற்றில் இதை ‘ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். ‘ஆய்த’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்து வகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து, கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரை யாக ஒலிக்கும் பொழுது, ஆய்தக் குறுக்கம் என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃது, அஃது என்பன போன்று வரும். கஃaது (கல் + தீது), முஃடீது (முள் + தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.

ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர் வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தை தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக் கொள்வான்.

அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும்.

இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவது போல் இடித்துத் தாக்கும் அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ‘ஃ’ என்பது போல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால் இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.

போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக் கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளி யாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ‘ஃ’ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.

இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமை யாலும் முப்புள்ளி எழுத்து, ஆய்தம் எனப் பெயர் பெற்றது என்று தமிழ்த்தாத்தா. உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கர் மகா வித்துவான். ச. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத் துக்களின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப் பெயர்) பெற்றுள்ளது.


Post a Comment

5 comments:

  1. மிக்க நன்றி...

    ReplyDelete
  2. ஆய்த எழுத்து(தனி நிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் ) பற்றிய
    தகவல்கள் அறியத் தந்ததற்கு நன்றிகள் தோழி..

    ReplyDelete
  3. எம் இனிய தோழிக்கு , உங்களின் பணியை மிகவும் அருமையாகவும் , சிறப்புடனும் செய்கிறீர்கள் ... இன்றுதான் உங்கள் வலைதளத்தை பார்த்தேன் , அருமை !!!! .... வியப்புடன் கூடிய மகிழ்ச்சி தோழி !!! ...எத்துனை பயனுள்ள செய்திகள் !!! ... " என்முதர்கொண்டு தாய் தமிழ் அருமையை மறந்தோர் எநிலடங்கதோர் , " மறைந்த ,மறந்த ,மறைக்கப்பட்ட உண்மைகளையும் , மக்களுக்கு வழங்குகிறீர்கள் ... பூரீபுடனும் கண்ணீருடனும் , உங்கள் சேவையை வணகுகேறேன் தோழி!!!... உங்கள் பணி சிறக்க வணங்கி வாழ்த்துகிறேன் தோழி !!! ... நான் கணிபொறி துறையில் "கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் & அனிமேஷன் " துறையில் பணியாற்றி வருகிறேன் .... ஏன் துறை சார்ந்த உதவிகளை செய்ய காத்து கொண்டு இருக்கிறேன் தோழி .... என் மினனசல் முகவரியை இத்துடன் இணைக்கிறேன் , "s4san.in@gmail.com " தயவுசெய்து உங்கள் பெரும்பணியில் எனையும் சேர்த்துகொள்ளுங்கள் ... உங்கள் வலைதலதிளிருந்து சில சேதிகளை எடுத்து " பாசே புக் " முக புத்தகத்தில் உங்கள் வளதலதி பெயருடனே இணைக்க ஆசை படுகிறேன் .... நன் சில ப்ரோஜெக்ட்ஸ் நம் தாய்தமிழ் பற்றி செய்ய ஆசை படுகிறேன் உதவுங்கள் .... நன்றி ... வெல்க தமிழ் !!! ....

    ReplyDelete
  4. மிக நன்று இவ்வாராய்ச்சி , வாழ்க உம்தொண்டு .,

    தோழிக்கு வாழ்த்துகள் , வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

    ReplyDelete