Monday, 20 December 2010

பிச்சாடண மூர்த்தி..

தில்லைச் சிதம்பரத்தில் ஆண்டுதோறும் பிச்சாடண மூர்த்தியாகச் சிவபெருமான் ஊர்வலமாய் வரும் உற்சவம் நடக்கும். அதாவது,

நடராஜரை ஆடிய பாதமாக அல்லாமல் பிச்சை எடுக்கும் வேடத்தில் உற்சவ மூர்த்தியாய் எடுத்துவருவார்கள். அப்போது,

யானை எல்லா அலங்காரங்களுடனும் முன்னே செல்லும், அபோது எக்காளம் எனப்படும் வாத்தியக் கருவி இசைப்பார்கள். தாளங்கள் முழங்கும். பெரிய ராஜ மரியாதையுடன் பிச்சாடண மூர்த்தி எழுந்தருளுவார்.

இந்தக் கோலத்தைப் பார்த்த காளமேகம், இகழ்வது போலப் போற்றிப் பாடுகிறார்.

"நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சைஎடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்

காளம்ஏன்? குஞ்சரம்ஏன்? கார்கடல்போல் தான்முழங்கும்
மேளம் ஏன்? ராஜாங்கம் ஏன்?."


நச்சுப் பாம்பை அணிந்த தில்லை நாதரே! நீர் பிச்சை எடுத்துச் சாப்பிடப் புறப்பட்டு விட்டீர். இந்த லட்சணத்தில் உமக்கு சிறப்பான(உச்சிதமாம்) எக்காளம் எதற்க்கு? யானை எதற்க்கு? கரிய நிறமுள்ள கடலைப் போல முழங்கும் மேளம் எதற்க்கு? இத்தனை ராஜ மரியாதை எதற்கு என்று கேட்கிறார் காளமேகம்.


Monday, 6 December 2010

சிவனுக்கு எத்தனை கண்..

சிவபெருமானுக்கு நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள் என்பார்கள். இதனால் முக்கண்ணன் என்றா காரண பெயரும் அவர்க்கு உண்டு.

ஆனால், காளமேகப் புலவரோ, ஒரு கணக்கிட்டு கழித்துக் கழித்துக் கடைசியில் சிவபெருமானுக்கு அரைக் கண் மட்டுமே சொந்தம் என்கிறார்.

எப்படி?

சிவனுக்கு மூன்று கண்கள் தான். ஆனால், அவர் உடலில் சரி பாதியாக இருப்பவர் உமை தானே. அப்படியானால் சிவனின் மூன்று கண்களில் உமைக்கு ஒன்றரைக் கண் சொந்தமாகிறது ஆக மிச்சமாக இருப்பது ஒன்றரைக் கண்.

அந்த ஒன்றரைக் கண்ணிலும், ஒரு கண் வேடன் கன்னப்பனால் கொடுக்கப் பட்டது. அதனால் அந்தக் கண்ணும் சிவனுக்கு சொந்தமானது அல்ல இரவல் வாங்கிய கண். எனவே ஒன்றரையில் இருந்து ஒன்று போனால் அரைக் கண்ணே மிகுதி ஆகிறது. ஆக சிவனுக்கு அரைக் கண் தான் என்று பாடுகிறார் காளமேகம்..

முக்கண்ணன் என்றரனைமுன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையுமித னாலென் றறி!


Monday, 8 November 2010

ஐயோ பருந்தெடுத்துப் போகிறதே..

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருடோற்சவம் நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

பக்தர்கள் கூட்டத்துடன் காளமேகமும் பெருமாளைத் தரிசிக்கச் சென்றிருந்தார். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவரிடம் காளமேகம் கேட்டார். "கருடோற்சவம் என்று சொன்னார்கள் பெருமாளை மனிதர்கள் தானே தூக்கிச் செல்கிறார்கள்." என்றார்.

உடனே அந்த வைணவ பக்த்தருக்கு கோவம் வந்துவிட்டது. உடனே அவர் " யோவ்! பெருமாள் கருடன் மீது ஆரோகணித்து இருக்கிறார். கருடன்தான் தூக்கி சுமக்கிறது" என்றார்.

"அப்படியா கருடன்தான் தூக்கி சுமக்கிறதா?" என்று கேட்ட காளமேகம். உடனே பின்வரும் பாடலைப் பாடினார்.

"பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால் ஐயோ
பருந்தெடுத்துப் போகிறதே பார்"


"பெருமாள் பேசாமல் கோவிலுக்குள் இருந்திருந்தால் பருந்து தூக்கிக் கொண்டு போகுமா?" என்று பொருள் வரும் படியாக தனது வழமையான கிண்டல் பாணியில் கவி பாடினார். இந்த பாடலைக் கேட்டவர்கள், "ஆஹா அருமையான நிந்தாஸ் துதி" என்று காளமேகத்தை புகழ்ந்தனர்.


Sunday, 17 October 2010

எலுமிச்சம் பழமாகும் பாம்பு..

"பெரியவிடமே சேரும் பித்தர்முடி ஏறும்
அரியுண்ணும் உப்புமே லாடும் - எரிகுணமாம்

தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம்."


பெரியவிடமே சேரும் - பாம்புக்கு அதிகமான விஷம் இருக்கும். அது, பித்தனான சிவபெருமான் தiலியல் ஏறி இருக்கும். அரி என்பது காற்று, பாம்பு காற்றைக் குடித்து உடலைத் தேற்றிக் கொள்ளும். பாம்பை அடித்துக் குற்றுயிராய் விட்டுவிட்டால் அது காற்றைக் குடித்து உடலை வளர்த்துப் பிழைத்துக் கொள்ளும். மேலாடும் - தலையைத் தூக்கி மறுபடியும் படமெடுத்து ஆடும். எரிகுணம் ஆம் - மிகவும் சினம் கொள்ளும் இயல்புள்ளது.எலுமிச்சம்பழம், பெரிய இடமே சேரும் - பெரிய மனிதர்களைச் சந்திக்கும் போது, கையுறையாகக் கொடுப்பதற்கு எலுமிச்சம்பழம் பயன்படும். பித்தர் முடி ஏறும் - பைத்தியம் பிடித்தவர்களின் தiலியல் தேய்க்கப் பயன்படும். அரியுண்ணும் - அறுக்கப்படும். உப்பு மேலாடும் - உப்பிடப்பட்டு ஊறுகாயாகும். எரிகுணம் ஆம் - புண் அல்லது அரித்த இடத்தில் தேய்த்தால் எரிச்சலை உண்டாக்கும். இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் ஆகும்.

காளமேகம் எலுமிச்சம்பழத்துக்கும் பாம்புக்கும் இணை வைத்துப் பாடியதை எல்லோரும் பாராட்டினர்

இதேபோல்,

யானையையும் ஆமணக்குச் செடியையும் ஒப்பிட்டு இன்னொரு பாடலைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காளமேகம் பாடினார்.

"முத்திருக்கும்கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் - எத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை ஆம்."


ஆமணக்கு, எண்ணெய் ஆட்டுதற்குரிய முத்துகளை உடையதாய் இருக்கும். காற்றில் அது தன் சிறிய கொம்புகளை அசைக்கும். தடித்த தண்டுகளையுடைய கிளைகளை ஏந்தி வளரும். முத்திருக்கும் காய்களைக் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்.மால் யானையின் விளைந்த தந்தத்தின் முத்திருக்கும் என்பார்கள். அது அல்லாமமல் தந்தத்தின் அடிப்பாகத்தில் முத்துக்களால் ஆன மாலையை அழகுக்காகவும் கௌரவத்திற்காகவும் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்தத் தந்தத்தின் துணை கொண்டு பெரிய மரங்களைத் தூக்கிவரும் கொம்பசைக்கும். அந்தத் தந்தங்களை இங்கும் அங்குமாய் அசைத்த்படி ஆடிக்கொண்டே நிற்கும். நிமிர்ந்து நிற்கும் வாழைமரத்தின் பழுத்த குலைகளைச் சாய்த்து வீழ்த்திச் சாப்பிடும். இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் ஆமணக்கும் யானை ஆகும்.

இதைக் கேட்ட நண்பர்கள் காளமேகத்தை புகழ்ந்தனர்..


Sunday, 3 October 2010

பாம்பாகும் பழங்கள்...

"காளமேகம் கழுதையும் குதிரையையும் கூட ஒன்றாக்கிப் பாட்டியற்றி விடுவார்" என்று எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டார்கள். எல்லாவற்றையுமே இணைத்து விடமுடியாது. அது மிகவம் சிரமம். சில ஒத்து வரும், சில ஒத்து வரா. ஆகையால் ஒரு நாள் கவிநயம் தெரிந்த ஓர் அன்பர், கவிஞர் காளமேகத்தைப் பார்த்து, "புலவர் ஐயா! பாம்பை எதற்கு ஒப்பிடலாம்?" என்று கேட்டார். பக்கத்திலிருந்த மற்ற நண்பர்களும் இரசிகர்களும் காளமேகத்தைப் பார்த்தனர்.

"பழங்கள் பாம்புக்கு ஒப்பாகும்" என்றார், காளமேகம்.

"என் குடத்திற்குள் அடைந்த மாதிரி புளித்துக் காடியான பழங்கள்ளையா சொல்கிறீர்கள்? அது ஆடிய பின் குடத்திற்குள் அடையாதே. அது கடத்திற்குள் புகுந்த பின்னர்தானே ஆட முடியும்?" என்றார் கவிநயம் தெரிந்த நண்பர்.

காளமேகம் சிரித்தார். "ஏதேது நீங்களும் இப்படி எல்லாம் சிலேடையாகப் பேச ஆரம்பித்து விட்டீர்கள்!" என்றார்.

"கம்பன் வீட்டுக் கட்டுத்துறையும் கவி பாடும் என்பார்கள். காளமேகத்தின் நண்பர் இந்த அளவு சிலேடை பேசாவிட்டால் கவிஞருக்கல்லவோ கெட்ட பெயர்" என்றார் நண்பர்."நான் கள்ளைச் சொல்லவில்லை. பழங்களைச் சொல்கிறேன். வாழைப்பழத்தையும் எலுமிச்சம்பத்தையும் உவமையாக்கி ஒப்பிடலாம்" என்றார் காளமேகம்.

பலரும் பாடச் சொன்னார்கள். காளமேகம் பாடினார்...

"நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்"

கவிநயம் அறிந்த நண்பர் "ஆஹா! ஆஹா!" என்று வியந்து கூவினார். மற்றவர்கள் சரியானபடி விளங்கிக் கொள்ளாமல் "கொஞ்சம் புரியுது. சில இடங்கள் புரியவில்லை" என்றனர். காளமேகம் கவிநயமறிந்த நண்பரை, பாட்டை விளக்கிக் கூறும்படி கட்டளையிட்டார். அவவாறே அந்த நண்பர் விளக்கினார்.

"பாம்பிடம் நஞ்சு இருக்கும். பழம் அதிகம் பழுத்து விட்டால் நஞ்சு. அதாவது நைந்து இருக்கும். பாம்பு தன் தோலான சட்டையை உரித்துக் கொள்ளும். அதன் மூலம் அது வளர்ந்து உரிய பக்குவத்தை அடைகிறது. வாழைப்பழத்தோலை உரித்தால்தான் அது சாப்பிடும் பக்குவத்தை அடைகிறது. பாம்பு சிவநாதர் சிரசில் (கழுத்திலும்) ஜடாமுடியைச் சுற்றியிருக்கும். பழமும் பஞ்சாமிர்தத்தில் சேர்ந்து அபிஷேகத்தின் போது சிவபெருமான் சிலையின் உச்சியில் இருக்கும். அப்பி வைக்கப்பட்டு பாம்பு வெம்சினம் கொண்டு தீண்டி, அதன் பற்பட்டால் ஆள் உயிரோடு மீள்வது கடினம். வாழைப்பழம் துணை உணவாக (வியஞ்சனம் - வெஞ்சனம் - வெஞ்சினம்) கொள்ளுமிடத்து பற்களிடையே பட்டால் அது வயிற்றுனுள் செல்வது தப்பாது. இவ்வாறு பாம்பும் வாழைப்பழமும் சமம்". இது கேட்டு எல்லோரும் பாராட்டினர். பின்,

"அடுத்து எலுமிச்சம்பழப் பாடலையும் சொல்லுங்கள்" என்றார்கள்... அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்...


Tuesday, 14 September 2010

தேங்காயும் நாயும் ஒன்று..

இந்திய நாட்டில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் இந்துக்களிடையே ஒரு வழக்கம் இருப்பதைப் பார்க்கலாம். எந்தச் சடங்கு நடைபெற்றாலும் நிச்சயமாய்த் தேங்காய் இருக்கும்.

மூன்று கண்களை உடையது தேங்காய். சிவனுக்குப் பெயரே முக்கண்ணர். தேங்காய்க்குமத் ஓடு துணை, சிவனுக்கும் ஓடு துணை.

ஆனால் காளமேகம் தேங்காயை நாய்க்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் எப்படி?

"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர்செப்பு".

நாய் எப்போதும் அலைந்துகொண்டே திரியும். நாய்க்கு வேலையும் இல்லை. இருக்க நேரமும் இல்லை என்பது பழமொழி. நாய் ஓடும். இருக்கும். தேங்காய்க்கு ஓடும் இருக்கும் நாய் வாயின் உட்புறம் வெளிறிப்போய் இருக்கும். தேங்காயை உடைத்தால் அதன் குழிந்த உட்புறம் வெளுத்திருக்கும். கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியை உள்வாய் என்பார்கள். தேங்காயின் நீர்ப்பிடிப்புப் பகுதி தேங்காயின் உள்வாய். நாய் தனக்கு விருப்பமுள்ள குலைத்தலைச் (குரைத்தல் என்பது வழக்கில் குலைத்தல் ஆனது) செய்வதற்கு வெட்கப்படாது. அதுபோல் பலரும் காணத் தேங்காய் தன் குலையில் இருக்க வெட்கப்படாது. இவ்விதம் இரண்டுக்கும் உள்ள ஒப்புவமையை வெளியிடுகிறார் காளமேகம்.


Friday, 10 September 2010

மோருடன் அளவு கடந்த தண்ணீர்...

தெருவிலே ஓர் ஆய்ச்சி மோர் விற்றுக்கொண்டு வந்தாள். "மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டார் நண்பர்.

"ஓ சாப்பிடலாமே!"என்றார் காளமேகம்.
.
ஆய்ச்சி, கூடையை இறக்கி, மோரை மொண்டு ஒரு பாத்திரத்திலே ஊற்றினாள்.

காளமேகம் அம்மோரைக் கையில் வாங்கிக் கொண்டதும் "இது என்ன வெண்ணீரா?" என்றார்.
வெண்ணீர் என்று சொன்னதை, வெந்நீர் எனப் பிழையாக உணர்ந்து, சுடுகிறது என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று கருதி ஆய்ச்சி "இந்த வெயிலிலே சுடாமல் என்ன செய்யும் ஐயா?"என்றாள்.

"இல்லைம்மா! நான் வெந்நீரா என்று கேட்கவில்லை வெண்மையான நீரா என்று கேட்டேன். ஒரே நீராய் இருக்கிறதே. மோரைக் காணோமே"என்றார் காளமேகம்.

"கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்துரையில் வந்ததற்பின்
வாரொன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.!"

என்று மோரைப் பார்த்துப் பாடினார் காளமேகப்புலவர்.

வானத்தில் (ககனம்) இருக்கும்போது மேகம் (கார்) என்று பெயர் பெற்றாய்! பின் மழையாய் நீ பெய்து தரையை அடைந்ததும் நீர் என்று பேர் படைத்தாய். கச்சணிந்த (வார் -கச்சு , இரவிக்கை) ஆய்ச்சியிடம் வந்த பிறகு மோர் என்று பேர் படைத்தாய். இவ்வாறு நீரே நீ இடத்திற்குத் தக்கபடி மூன்று பேரும் பெற்றுவிட்டாய்.

இவ்வாறு பாடியதன் மூலம் ஆய்ச்சியின் மோருடன் அளவு கடந்த தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை மறை பொருளில் பாடினார் காளமேகம்.


Saturday, 14 August 2010

எல்லோருக்கும் ஆறுதலை...

ஒரு சமயம் ஒருவர் காளமேகத்திடம் எல்லோருக்கும் ஆறுதலை அளிக்கக் கூடியதாக ஒரு பாடலை பாடும் படி கேட்டார்.

"எல்லோருக்கும் ஆறுதலை அளிக்க முடியாது. வெண்பாவில் நான்கு அடிகள் தான் உண்டு, அதற்க்குள் அடங்குபவர்கள் எல்லோருக்கும் ஆறுதலை உண்டு" என்று சொல்லி விட்டு, பாடினார்...


சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
ஐங்கரர்க்கும் மாறுதலை யானதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை பித்தாநின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலை பார்!

காளமேகம் பாடி முடித்ததும் பாடலை விரும்பிக் கேட்டவர், "என்ன இது, எல்லா மக்களுக்கும் ஆறுதலைத் தரக்கூடிய பாடலைப் பாடும் படி கேட்டால், நீங்கள் எல்லோருக்கும் ஆறுதலை இருப்பதாகப் பாடிவிட்டீர்களே" என்று கேட்டார்.

அதற்க்கு காளமேகம் விளக்கினார்,

சங்கரராகிய சிவபெருமானுக்கும் ஆறு தலையில் உள்ளது (சங்கரர்க்கும் ஆறுதலை),சரவணபவனாகிய முருகன் ஆறு உருவங்கள் ஆகப் பிறந்து பின்பு ஓன்று சேர்ந்ததால் அவருக்கும் ஆறுதலைகள் (சண்முகற்கும் ஆறுதலை), ஐங்கரனாகிய விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறுபட்ட யானையின் தலை இருப்பதால் மாறுதலை(ஐங்கரர்க்கும் மாறுதலை யானதே), பித்தன் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பாதக் கமலங்களை பூஜித்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லோருக்கும் நிச்சயம் ஆறுதல் உண்டு(பித்தாநின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலை பார்) என்றார்.

இந்தப் பாடலைக் கேட்டோருக்கும், மற்றோருக்கும் ஆறுதலை தரும் என்பதில் ஐயம் இல்லை அல்லவா?

Thursday, 29 July 2010

ஒரு கோட்டானைப் பெற்றவள்..


கவி காளமேகம் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள தில்லை மூவாயிரவர்கள் சிறந்த சிவபக்தர்கள், ஒற்றுமையில் சிறந்தவர்கள், அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது நடராஜர் கோவில்.

புலவர் தில்லைக்கு வந்திருந்த செய்தியைக் கேட்டு பலர் அவரை சென்று சந்தித்தனர். அவர்களில் சிலர் தில்லை மூவாயிரவர்களை சேர்ந்தவர்கள், அவர்களுடன் கோவிலுக்கு சென்ற காளமேகம் ஆடியபாதரை வணங்கி, திருநீற்று பிரசாதம் பெற்றுத்திரும்புகிற சமயம், ஒரு பக்தர் அம்பலவானரைப் பற்றி பாடசொல்லி வேண்டினார்.

நையாண்டிக்கு பேர் போனவர் அல்லவா காளமேகம் அவர் தனது பாணியிலேயே பாடினார்..

"மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லை நகர்
ஆட்டுக்கோ னுக்குபெண் டாயினால் - கேட்டிலையோ
குட்டி மறிக்க கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்".

பாடலைக் கேட்டதும் சிவபக்தருக்கு கோபம் வந்துவிட்டது..

"என்னய்யா! சிவபெருமானை கோனார் என்று சொல்லிவிட்டீரே!" என்று கேட்டார் கோபமாக...

"நான் எங்கே சிவபெருமானை கோனார் என்றேன்?" என்று கேட்டார் காளமேகம்.

அதற்க்கு சிவபக்தர் " ஏன் இல்லை? ஆட்டுக்கோன் என்றீரே! என்று கேட்டார்.

ஆமாம்! சொன்னேன்! பாட்டின் முழுப் பொருளையும் நீர் அறிய வில்லை.. சொல்கிறேன் கேளும்..

"மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் இடையர் தலைவனான கண்ணனின் தங்கையான உமை, வடமதுரையை விட்டு வந்து , ஆடவ அரசனான (ஆட்டுக்கோன்) சிவபெருமானுக்கு மனைவியானாள், அதோடு மட்டுமில்லாமல் வழியில் போவோர் வருவோரை எல்லாம் தலையில் குட்டிக்கொண்டு நிக்க வைக்க, ஒரு தந்தத்தை உடைய கணபதியை (ஒரு கோட்டானை) பெற்றாள், அப்படி பெற்ற உமாதேவி மணிகள் அணிந்த சிறிய இடையை (சிற்றிடைச்சி) உடையவள் ஆகவே இருக்கிறாள்" என்று கூறி முடித்தார்.

சிவபக்தருக்கு மகிழ்ச்சியடைந்து, "கவி என்றால் இதுவன்றோ கவி" என்று புகழ்ந்தார்...


Thursday, 22 July 2010

சிலேடை, நையாண்டிப் பாடல்கள்...

சிலேடை என்பது ஒரு அலங்காரம். ஒரு பொருள் தரும் சொல் வேறு ஒரு பொருளையும் மறைமுகமாய்க் குறிக்குமானால் அது சிலேடை ஆகும்.

ஏசல் என்பது நேரடியாக சொல்லி இடித்து உரைப்பதே ஆகும். ஜாடை என்பது மறைமுகமாக சொல்வதாகும். பொதுவாக ஜாடை பேசுவதில் எப்போதும் பெண்கள் கைதேர்ந்தவர்களாவர். இப்படி ஜாடையாக கேலி செய்யும் போது கேலிக்குரியவர்கள் தங்களைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வர். ஆனால் தம்மைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்று யாராலும் நிறுவ முடியாதது இதன் சிறப்பம்சம்.

சிலேடை நயத்துடன் எழுதப்படும் கவிகள் அந்தக்காலத்தில் மிகவும் ரசிக்கப்பட்டதுடன், புகழ் பெற்றும் விளங்கியது.

சிலேடையாகவும், நையாண்டியாகவும் பாடுவதில் சிறந்து விளங்கியவர் கவி காளமேகப் புலவர்.

காளம் என்றால் கரிய என்று பொருள், காளமேகம் என்பது கறுத்த மழை மேகத்தைக் குறிக்கும். காளமேகத்தில் சற்று குளிர்ந்த காற்று பட்டால் போதும் மழை கொட்டு கொட்டென்று கொட்டிவிடும்.

அதேபோல, கவி காளமேகமும் கவிமழை பொழிவதில் வல்லவர் என்று போற்றப்படுகிறார்.

இனி வரும் பதிவுகளில் இந்த சிலேடை பாடல்கள் பற்றிப் பார்க்கலாம்...


Friday, 18 June 2010

விவேக சிந்தாமணி - 10.

சேரும் இடத்தை பொறுத்தே சிறப்பு...

"கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா"

பொருள் :-

நினைத்ததெல்லாம் தரக்கூடிய கற்பக மரத்தில் போய் இருந்த காகத்துக்கும் அது நினைத்தால் அமுதத்தையும் உண்ணக் கூடியதாக இருக்கும். அது போல கல்வி அறிவில் வேந்தர் போல இருக்கும் நல்லோரை நாடி இருப்போர்க்கு நன்மையே விளையும். இதே போல விவேகமற்ற மூடரை சார்ந்திருப்போருக்கு இலவுகாத்த கிளி போல என்றும் நல்வாழ்வு கிட்டாது என்பது இதன் பொருள்.


Thursday, 17 June 2010

விவேக சிந்தாமணி - 09.

குரங்குப் புத்தியும் கோணல் புத்தியும்


"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே"


பொருள் :-

மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்கு ஒன்றைப் பார்த்து கவலைப் பட்ட தூக்கனாங்குருவி, அதனிடம் நீயும் என்னைப் போல ஒரு கூடு கட்டிக் கொண்டிருந்தால் இப்படி மழையில் நனைய வேண்டி வராதே என்றது. ஆத்திரம் கொண்ட குரங்கு தூக்கனாங் குருவியின் கூட்டினை பிய்த்து எறிந்தது. அதைப் போல அரிய நூல்களின் உயரிய கருத்துக்களை அறிவில்லாத மூடர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எவ்வித பயனும் இல்லை, துன்பமே விளையும் என்பது இதன் பொருள்.


விவேக சிந்தாமணி - 08.

தவளையின் குணமும் மடையர்கள் இயல்பும்


"தண்டா மரையின் உடன் பிறந்தும்
தன்தேன் நுகரா மண்டுகம்;
வண்டோ கானத்து இடையிருந்து
வந்தே கமல மதுஉண்ணும்!
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து இங்கு உறவாடி
தமிமில் கலப்பார் கற்றோரே!''

பொருள் :-

குளிர்ந்த தாமரையில் சுரந்திருக்கும் சுவையான தேனின் அருமையினை அதே தடாகத்தில் வசிக்கும் தவளை அறியாது. ஆனால் எங்கோ காட்டிலிருக்கு வண்டானது தேடி வந்து தாமரையின் தேனை பருகி மகிழும்.இதைப் போலவே அறிவற்றவர்கள், தங்களுடன் பழகிவரும் நல்லோரின் சிறப்பினை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் கற்றறிந்தவர்கள் நல்லோரை தேடி இனம் கண்டு அவரோடு நட்பு பூண்டு அவர்களோடு இனைந்திருப்பர்... என்றும் சிறந்திருப்பர் என்பது இதன் பொருள்.
Saturday, 29 May 2010

விவேக சிந்தாமணி - 07


மூடர்களின் குணம்

"பொருட் பாலை விரும்புவார் காமப்பால்
இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
விரும்பார்கள் அறி வொன்று
இல்லார் குருப்பாலர் கடவுளர் பால்
வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக்
கோரார் செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே
கோடி செம்பொன் சேவித்து இடுவார். "


பொருள் :-

அறிவென்று ஒன்றும் கிடையாத மூடர்கள் பொருட்செல்வத்தில் தான் ஆசை கொள்வார்கள், சிற்றின்பத் திலேயே கிடப்பார்கள் , புகழையும் அருளையும் தரக்கூடிய தருமா நெறியில் நிற்க மாட்டார்கள் , குருவிடம் , கடவுளிடம், பிராமணர்களிடம் ( முறையே தட்சனை, சமர்ப்பணம், தானம்) கொடுக்க விரும்ப மாட்டார்கள், தங்களை மதிக்காமல் தங்களுக்கு நல்லது சொல்லாமல் தங்களை செருப்பால் அடிப்பவர்களுக்கே வழிய ஏராளமான பொன்னை பொருள்கள கொடுப்பார்கள் என்பது இதன் பொருள்.


Monday, 19 April 2010

விவேக சிந்தாமணி - 06

பொருளிருந்தால் போருந்தியிருப்பர்.

"ஆலிலை பூவும் காயும்
அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம்
தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி
வந்திப்பர் கோடா கோடி
ஆலிலை ஆதிபோனால்
அங்குவந்திருப்பர் உண்டோ?"


பொருள் :-

ஆலமரத்தில் இலை காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அம்மரத்தில் குடியிருக்கும் , அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் அம்மரத்தில் எந்தப் பறவையும் வந்து தங்காது, அது போல பெரும் செல்வம் பெற்றிருப்போரை தேடி ஏராளமானோர் வருவர், அதே செல்வந்தர்கள் வறுமைப் பட்டால் அவர்களைத் தேடி வருபவர் யாரும் உண்டோ?

Friday, 2 April 2010

விவேக சிந்தாமணி - 05.

"கதிர்பெறு செந்நெல்வாடக்
கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலை இலார்க்கு ஈயமாட்டார்."பொருள் :-

கதிர்களை யுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வடிக் கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, உலகத்தார்கள் மதிக்கும் அளவு அதிக செல்வம் பெற்ற செல்வந்தர்கள், வறுமையால் வாடுபர்களுக்கு உதவிடாமல், செல்வம் உள்ளவருக்கே கொடுக்கிறார்களாம்.

குறிப்புரை :-


மதிதனம் - வினைத்தொகை.

Wednesday, 24 March 2010

பண்டைய தமிழ் எண் வடிவங்கள்...

தமிழ் எண்கள்


* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

Sunday, 21 March 2010

தமிழ் எண்வரிசையும்... அளவீட்டு முறைகளும்...

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

Sunday, 14 March 2010

விவேக சிந்தாமணி - 04

மலர்ந்த முகத்துடன் இடுவதே மாபெரும் விருந்து.

"ஒப்புடன் முகம மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ்இட் டாலும்
உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடுபா லன்னம்
முகங்கடுத் திடுவா ராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகுந் தானே"


பொருள் :-

நாம் விருந்துக்குச் செல்லும் வீட்டிலுள்ளவர்கள் நம்மைக் கண்டவுடன் இணக்கமுடன் முகம் மகிழ்ச்சியால் விகசிக்கப் பெற்று, நமக்கு வேண்டிய மரியாதைகளைச் செய்து, நம்மிடத்து உண்மையையே பேசி, உப்பில்லாத கஞ்சியை வார்த்தால் கூட அதை உண்டால் நமக்கு அது அமிர்தம் போல் தெரியும். நம்மைச் சரிவர உபசரியாமல் நம்மிடம் அன்பின்றி முகத்தைச் சுளித்துக்கொண்டே மூவகை பழங்களோடு பாற்சோற்றை அளித்தபோதும் அது நமக்கு திருப்தி அளிக்காமல் ஏற்கனவே நிறைந்திருக்கும் பசியுடன் மேலும் கடும்பசியை உண்டாக்கிவிடும்.

விவேக சிந்தாமணி - 03

குக்கலின் இயல்பும் மக்களின் இயல்பும்.


"குக்கலைப் பிடித்து நாவிக்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி
மிகுமணம் செய்தா லும்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்க லல்லால்
குலந்தனில் பெரிய தாமோ?"


பொருள் :-

நாயைப் பிடித்துவந்து புனுகுப் பூனையின் கூட்டில் அடைத்துவைத்து, மிகுதியான ஒப்பற்ற மஞ்சளைப் பூசி, மிகநறுமணம் கமழும்படி செய்த போதும். அந்த நாய் அதனுடைய குலத்தில் இருந்து வேறு பட்டதாகுமா? ( ஆகாது ). அந்த நாயிடம் புனுகு உண்டாகுமோ? ( உண்டாகாது ). என்ன செய்தாலும் நாய் நாயாகவே இருக்குமே தவிர அது குலத்தில் பெரியதாக ஆகிவிடுமோ? ( ஆகாது ).

குறிப்புரை :-

குக்கல் - நாய், நாவி - புனுகுப் பூனை.

Saturday, 13 March 2010

விவேக சிந்தாமணி - 02

காலம் வந்த பின்பும், காரியம் முடிந்த பின்னும் நடப்பவை.

“பிள்ளைதான் வயதில் முத்தால்
பிதாவின்சொற் புத்தி கேளான்
கள்ளின்நல் குழலாள் முத்தால்
கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால்
சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால்
உலகோர்பண் டிதரைத் தேடார்”பொருள் :-
புதல்வன் பிராயம் முதிர்ந்தவன் ஆகிவிட்டால் தந்தை சொல்லுகின்ற புத்தி மதிகளைக் கேட்க மாட்டான். அழகிய கூந்தலை உடையவளான மனைவி வயாதானபின் தன மணாளனை பொருட்டாக மதிக்க மாட்டாள். தெளிவாக ஐய்யந்திரிபறக் கல்வியைக் கற்றுக் கொண்டபின் மாணாக்கனும் ஆசிரியனை நாடமாட்டான். சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடைந்து விட்டால் இவ்வுலகத்தினர் அதன் பின் வைத்தியரை நாட மாட்டார்கள்.

Thursday, 11 March 2010

"ஆய்த எழுத்து" காரணப்பெயரின் தோற்றம்....

தமிழில் ஆய்த எழுத்தாக ‘ஃ’ உள்ளது. அது எப்பொழுது தோன்றியது? அதற்கு ஏன் ஆய்த எழுத்து என்று பெயர் வந்தது?

உலகில் பேச்சு மொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. ‘அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. ‘அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து.

கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனி நிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர்.

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் தனிநிலை எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.

வழக்காற்றில் இதை ‘ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். ‘ஆய்த’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்து வகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து, கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரை யாக ஒலிக்கும் பொழுது, ஆய்தக் குறுக்கம் என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃது, அஃது என்பன போன்று வரும். கஃaது (கல் + தீது), முஃடீது (முள் + தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.

ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர் வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தை தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக் கொள்வான்.

அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும்.

இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவது போல் இடித்துத் தாக்கும் அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ‘ஃ’ என்பது போல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால் இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.

போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக் கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளி யாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ‘ஃ’ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.

இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமை யாலும் முப்புள்ளி எழுத்து, ஆய்தம் எனப் பெயர் பெற்றது என்று தமிழ்த்தாத்தா. உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கர் மகா வித்துவான். ச. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத் துக்களின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப் பெயர்) பெற்றுள்ளது.

Saturday, 6 March 2010

விவேக சிந்தாமணி - 01

நன்மை நல்காதவை.

"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனில்லை ஏழும்தானே"

பொருள் :
மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும், என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.

Thursday, 4 March 2010

விவேக சிந்தாமணி... (கடவுள் வாழ்த்து)

கடவுள் வாழ்த்து
(மூலமும் உரையும்)

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணம் அதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.”


பொருள் :
திருவண்ணாமலைக் கொபுரத்துள்ளே குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைக் கரம் கூப்பி வணங்கினால், துன்பங்கள் தொலையும், கொடிய வினைப் பயன்கள் போகும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்து வந்ததாகிய பிறவித்துயர் நீங்கும், இன்னும் நீங்காமல் எந்தத் துயரம் இருந்தாலும் போகும். இவ்வாறு துன்பங்கள் எல்லாம் விலகி நல்ல நிலை கிடைக்க பெறும்.

குறிப்புரை :

போம் - போகும், தொழுதக்கால் - தொழுதால்( 'கால்' என்னும் எழனுருபு மூன்றாம் வேற்றுமையுருபின் பொருளில் வந்தது ).

Wednesday, 3 March 2010

விவேக சிந்தாமணி..

நீதிக் கருத்துக்களை பாடல்களின் மூலமாக கூறும் அதே வேளை பல்வேறு சுவை ததும்பும் பாடல்களும் கலந்து அழகு படத் தொகுக்கபாட்ட நூலே விவேக சிந்தாமணியாகும்.

இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாக தாம் கருதியவற்றை தேர்ந்தெடுத்து கதம்பமாக்கி தருகிறார் தொகுப்பாசிரியர்.

தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்னவென்றும் இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை.

இந்த நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.

தொகுத்தவர், பாடல்களை எந்தவித வகுப்பு பகுப்புக்கும் உட்படுத்தாமல் எந்த வித வரைமுறையும் பயன்படுத்தாமல்
வெறும் கலவையாக தந்துள்ளார்.

அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாள எல்லாப் பாடல்களும் சிந்தைக்கிநியவை, பொருள் புரிதற்கு எளியவை.

சில பாடல்கள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும், ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் உள்ள போதிலும், அக்கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காக அப்பாடல்களை படித்துச் சுவைக்கலாம்.

ஆகவே, அடுத்த அடுத்த பதிவுகளில் அந்த பாடல்களையும் விளக்க உரைகளையும் தெளிவாக பார்க்கலாம்.

Wednesday, 24 February 2010

முக்கியமான மூன்றுகள்...

மதிக்க வேண்டிய மூன்று
முதுமையானோர் , மார்க்கம் , சட்டம்.

நேசிக்க வேண்டிய மூன்று
நேர்மை , தூய்மை, கடின உழைப்பு.

போற்றவேண்டிய மூன்று
அறிவு, அழகு , பண்பு

பேணி வளர்க்க வேண்டிய மூன்று
திருப்தி, தைரியம், மன மகிழ்ச்சி

தவிர்க்கவேண்டிய மூன்று
புகைத்தல், மது அருந்தல், சூதாடல்

அடக்க வேண்டிய மூன்று

நா, வேதனை, கோபம்

கட்டாயம் கவனிக்க வேண்டிய மூன்று
பேச்சு, நடைமுறை, செயல்கள்

ஆதரிக்க வேண்டிய மூன்று
வாக்குறுதி, நட்பு, பண்பு

ஒழிக்க வேண்டிய மூன்று
திருட்டு, சோம்பல், பொய்

விரும்ப வேண்டிய மூன்று

கருணை, நற்குணம், மன அமைதி

வெறுக்க வேண்டிய மூன்று

பெருமை, அநீதி, வாக்கு மீறல்

தப்பித்துக்கொள்ள வேண்டிய மூன்று

தீய எண்ணம், பொறாமை, பிடிவாதம்

அஞ்சவேண்டிய மூன்று

களவு,கோள், பொய்

எதிர் கொள்ள வேண்டிய மூன்று

கவலை, மரணம், பயணம்

போரிட வேண்டிய மூன்று

தேசம், கண்ணியம், நட்பு

Sunday, 21 February 2010

ஆய கலைகள் அறுபத்து நான்கு....

1. அக்கர இலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்)
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. சோதிடம்
9. தரும சாஸ்திரம்
10. யோகம்
11. மந்திரம்
12. சகுனம்
13. சிற்பம்
14. வைத்தியம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்த பிரமம்
23. வீணை
24. வேனு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அகத்திர பரீட்சை
28. கனக பரீட்சை
29. இரத பரீட்சை
30. கஜ பரீட்சை
31. அசுவ பரீட்சை
32. இரத்தின பரீட்சை
33. பூ பரீட்சை
34. சங்கிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகர்ஷணம்
37. உச்சாடணம்
38. வித்து வேஷணம்
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தர்வ விவாதம்
44. பைபீல வாதம்
45. தாது வாதம்
46. கெளுத்துக வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாய பிரவேசம்
51. ஆகாய கமனம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிச்யம்
54. இந்திர ஜாலம்
55. மகேந்திர ஜாலம்
56. அக்னி ஸ்தம்பம்
57. ஜல ஸ்தம்பம்
58. வாயு ஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம்
62. கன்ன ஸ்தம்பம்
63. கட்க ஸ்தம்பம்
64. அவத்தை பிரயோகம்

நேரு மறைந்த போது கண்ணதாசன் எழுதிய கண்ணீர் அஞ்சலி..

சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!

வேறு

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளியைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எமகில்லையே…
நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…

நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடணே வைத்திருப்போம்

அம்மா…அம்மா….அம்மா…..!

கவிஞர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்...

அமெரிக்காவுக்குச் சென்ற கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவில்லை என்று ஆதங்கத்துடன் ஒரு பாட லை எழுதினார்:

“மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை”

என்றார் கவிஞர் கண்ணதான். இதுதான் அவர் எழுதிய கடைசிப் பாடல்.

Friday, 19 February 2010

தமிழுக்கு...

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!