Friday 29 April 2011

பயனில்லை...


எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒன்று ஒதுக்குபுறமாய்க் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு ஒன்று கவலையுடன் பார்த்தது.

பின் அது பசுவைப் பார்த்து "முன்பெல்லாம் உன்னை வீட்டுக்காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே, புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே, இப்போதெல்லாம் திரிம்பிக் கூடப் பார்ப்பதில்லயே ஏன்?" என்று சோகமாய்க் கேட்டது..

"பயனில்லை அதனால் பார்ப்பதில்லை" என்று சொல்லிய பசு..

பெருமூச்சுடன் சொன்னது..

"மடியில் பாலும் இல்லை
மதிக்க ஆளும் இல்லை"



Wednesday 27 April 2011

பணிவு..


மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு.

"இந்தத் தெருவிளக்குக் கோழையாய் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா" என்றது காக்கை.

நீண்ட காலமாக தெருவின் ஓரத்திலேயே நின்ற தென்னைக்குக் கோபம் வந்துடவிட்டது.

"கூர்ந்து கவனி, தெருவில் ஒளியைப் பாய்ச்சித் தொண்டாற்றிக் கொண்டே பெருமையால் தலைவீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு"

என்ற தென்னை,

மீண்டும் "புரிகிறதா" என்ற தொனியில் காக்கையைப் பார்த்துவிட்டு, பிறகு அது சொன்னது...

"பணிவு வேறு
குனிவு வேறு"