Monday 6 June 2011

உதவியும்!...உயர்வும்!

இங்கிலாந்து நாட்டின் பண்ணையொன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஓர் ஏழைச் சிறுவன்.

அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து சிறுவனின் ஒருவனின் அலறல் சத்தம் கேட்கவே இடையன் ஓடிப் போய் பார்த்தான். அவன் வயதில் ஒருவன் தண்ணீரில் தத்தளித்த்க் கொண்டிருப்பதைப் பார்த்து நீரில் பாய்ந்து அவனை கரைக்கு இழுத்து வந்தான்.

தன்னைக் காப்பாற்றிய இடையனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எதாவது செய்ய விரும்பினான் குளத்தில் விழுந்த சிறுவன், அவன் விரும்பும் எதையம் தான் தருவதாகக் கூறினான். இடையனோ தனக்கு படிக்க வேண்டுமென ஆசையிருப்பதாக கூறினான். உடனே அவனும் தன் தந்தையிடம் கூறி இடையனின் படிப்புக்கு ஏற்பாடு செய்தான்.

அந்த இடையன் தான் உலகப்புகழ் பெற்ற அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங், குளத்தில் விழுந்த பணக்கார சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராயிருந்த வின்ஸ்டண்ட் சர்ச்சில்.


Monday 30 May 2011

கவிராயர்கள்..

ஒரு சமயம் பல கவி வாணர்கள் திருமலையானிடம் புகழும் மதிப்பும் பெற்ற காளமேகத்தை இழிவுபடுத்த எண்ணினார்கள். அவர்கள் அரச அவையில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்து கொண்டு காளமேகத்தை அலட்சியமாக பார்த்தபடி இருந்தார்கள்.

உள்ளே வந்த காளமேகம் அங்கு நின்ற சேவகனைப் பார்த்து " யார் இவர்கள் உயரத்தில் அமர்ந்திருக்கிறர்களே!" என்று கேட்டார். அதற்க்கு அந்த சேவகன் முன்பே அவர்கள் கூறியபடி "கவிராயர்கள்" என்றான்.

உடனே காளமேகம்..

வாலெங்கே? நீண்ட வயிறெங்கே, முன்னிரண்டு
காலெங்கே? உட்குழிந்த கண்ணெங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்!


ராயர்கள் என்னும் சொல்லுக்கு ராஜர்கள் என்பது பொருள். கவி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு குரங்கு என்னும் பொருளும் உண்டு. அதாவது, "கபி" என்பது "கவி" என்று தமிழில் மருவிய்து. வட மொழியில் உள்ள 'ப' , 'வ' ஆகும்; பெங்கால், வங்காளம் ஆனது போல்..

புவிராயர் போற்றும் புலவர்கள் தான் என்று எண்ணியிருந்தேன், நீங்கள் "கவி" ராஜாக்கள் என்கிறீர்கள். குரங்குகளைப்போல் உயர்த்தில் இருந்தால் மட்டும் போதுமா? மற்ற அங்கங்களும் அழகும் வேண்டாமா? என்று கிண்டல் செய்தார்.


Saturday 14 May 2011

நிறைவும்! மறைவும்!



நகைக் கடையின் கண்ணாடிப் பெட்டியில் வெல்வெட் துணியில் பொதியப் பட்டு கண்ணை கவர்ந்து கொண்டிருந்த இரத்தினக் கல்லைப் பார்த்துக் தெருவில் கிடந்த கூழாங்கல் ஒன்று பொறாமைப்பட்டது.

அந்த ரத்தினத்தைப் போல நானும் ஒரு கல்தானே, எனக்கு ஏன் மதிப்பில்லை?. இப்படி தெருவில் கிடக்கிறேனே என ஓலமிட்டது. இதைக் கேட்டு பக்கத்தில் கிடந்த கடப்பாரை சிரித்துக் கொண்டே சொன்னது...!

ஏ கூழாங்கல்லே! இத்தனை காலமாய் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் மிதித்துப் போகும்படி இந்த தெருவில் கிடக்கிறாய் ஆனால் இரத்தினக் கல் அப்படியில்லை, நிறைந்து வளர்ந்து பூரித்து இரத்தினமாகும் வரை அது வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னை தானே உருவாக்கிக் கொண்டிருந்தது என்றது.

அப்படியென்றால் ...? என்று இழுத்த கூழாங்கல்லைப் பார்த்து கடப்பாரை அழுத்தம் திருத்தமாய் சொன்னது..

“நிறைவாகும் வரை மறைவாக இரு!, மறைவாக இருக்கும் நிறைவுக்குதான் எப்போதும் மரியாதை”



Friday 29 April 2011

பயனில்லை...


எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒன்று ஒதுக்குபுறமாய்க் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு ஒன்று கவலையுடன் பார்த்தது.

பின் அது பசுவைப் பார்த்து "முன்பெல்லாம் உன்னை வீட்டுக்காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே, புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே, இப்போதெல்லாம் திரிம்பிக் கூடப் பார்ப்பதில்லயே ஏன்?" என்று சோகமாய்க் கேட்டது..

"பயனில்லை அதனால் பார்ப்பதில்லை" என்று சொல்லிய பசு..

பெருமூச்சுடன் சொன்னது..

"மடியில் பாலும் இல்லை
மதிக்க ஆளும் இல்லை"



Wednesday 27 April 2011

பணிவு..


மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு.

"இந்தத் தெருவிளக்குக் கோழையாய் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா" என்றது காக்கை.

நீண்ட காலமாக தெருவின் ஓரத்திலேயே நின்ற தென்னைக்குக் கோபம் வந்துடவிட்டது.

"கூர்ந்து கவனி, தெருவில் ஒளியைப் பாய்ச்சித் தொண்டாற்றிக் கொண்டே பெருமையால் தலைவீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு"

என்ற தென்னை,

மீண்டும் "புரிகிறதா" என்ற தொனியில் காக்கையைப் பார்த்துவிட்டு, பிறகு அது சொன்னது...

"பணிவு வேறு
குனிவு வேறு"