Monday 30 May 2011

கவிராயர்கள்..

ஒரு சமயம் பல கவி வாணர்கள் திருமலையானிடம் புகழும் மதிப்பும் பெற்ற காளமேகத்தை இழிவுபடுத்த எண்ணினார்கள். அவர்கள் அரச அவையில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்து கொண்டு காளமேகத்தை அலட்சியமாக பார்த்தபடி இருந்தார்கள்.

உள்ளே வந்த காளமேகம் அங்கு நின்ற சேவகனைப் பார்த்து " யார் இவர்கள் உயரத்தில் அமர்ந்திருக்கிறர்களே!" என்று கேட்டார். அதற்க்கு அந்த சேவகன் முன்பே அவர்கள் கூறியபடி "கவிராயர்கள்" என்றான்.

உடனே காளமேகம்..

வாலெங்கே? நீண்ட வயிறெங்கே, முன்னிரண்டு
காலெங்கே? உட்குழிந்த கண்ணெங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்!


ராயர்கள் என்னும் சொல்லுக்கு ராஜர்கள் என்பது பொருள். கவி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு குரங்கு என்னும் பொருளும் உண்டு. அதாவது, "கபி" என்பது "கவி" என்று தமிழில் மருவிய்து. வட மொழியில் உள்ள 'ப' , 'வ' ஆகும்; பெங்கால், வங்காளம் ஆனது போல்..

புவிராயர் போற்றும் புலவர்கள் தான் என்று எண்ணியிருந்தேன், நீங்கள் "கவி" ராஜாக்கள் என்கிறீர்கள். குரங்குகளைப்போல் உயர்த்தில் இருந்தால் மட்டும் போதுமா? மற்ற அங்கங்களும் அழகும் வேண்டாமா? என்று கிண்டல் செய்தார்.


Saturday 14 May 2011

நிறைவும்! மறைவும்!



நகைக் கடையின் கண்ணாடிப் பெட்டியில் வெல்வெட் துணியில் பொதியப் பட்டு கண்ணை கவர்ந்து கொண்டிருந்த இரத்தினக் கல்லைப் பார்த்துக் தெருவில் கிடந்த கூழாங்கல் ஒன்று பொறாமைப்பட்டது.

அந்த ரத்தினத்தைப் போல நானும் ஒரு கல்தானே, எனக்கு ஏன் மதிப்பில்லை?. இப்படி தெருவில் கிடக்கிறேனே என ஓலமிட்டது. இதைக் கேட்டு பக்கத்தில் கிடந்த கடப்பாரை சிரித்துக் கொண்டே சொன்னது...!

ஏ கூழாங்கல்லே! இத்தனை காலமாய் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் மிதித்துப் போகும்படி இந்த தெருவில் கிடக்கிறாய் ஆனால் இரத்தினக் கல் அப்படியில்லை, நிறைந்து வளர்ந்து பூரித்து இரத்தினமாகும் வரை அது வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னை தானே உருவாக்கிக் கொண்டிருந்தது என்றது.

அப்படியென்றால் ...? என்று இழுத்த கூழாங்கல்லைப் பார்த்து கடப்பாரை அழுத்தம் திருத்தமாய் சொன்னது..

“நிறைவாகும் வரை மறைவாக இரு!, மறைவாக இருக்கும் நிறைவுக்குதான் எப்போதும் மரியாதை”