Thursday, 29 July 2010

ஒரு கோட்டானைப் பெற்றவள்..


கவி காளமேகம் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள தில்லை மூவாயிரவர்கள் சிறந்த சிவபக்தர்கள், ஒற்றுமையில் சிறந்தவர்கள், அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது நடராஜர் கோவில்.

புலவர் தில்லைக்கு வந்திருந்த செய்தியைக் கேட்டு பலர் அவரை சென்று சந்தித்தனர். அவர்களில் சிலர் தில்லை மூவாயிரவர்களை சேர்ந்தவர்கள், அவர்களுடன் கோவிலுக்கு சென்ற காளமேகம் ஆடியபாதரை வணங்கி, திருநீற்று பிரசாதம் பெற்றுத்திரும்புகிற சமயம், ஒரு பக்தர் அம்பலவானரைப் பற்றி பாடசொல்லி வேண்டினார்.

நையாண்டிக்கு பேர் போனவர் அல்லவா காளமேகம் அவர் தனது பாணியிலேயே பாடினார்..

"மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லை நகர்
ஆட்டுக்கோ னுக்குபெண் டாயினால் - கேட்டிலையோ
குட்டி மறிக்க கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்".

பாடலைக் கேட்டதும் சிவபக்தருக்கு கோபம் வந்துவிட்டது..

"என்னய்யா! சிவபெருமானை கோனார் என்று சொல்லிவிட்டீரே!" என்று கேட்டார் கோபமாக...

"நான் எங்கே சிவபெருமானை கோனார் என்றேன்?" என்று கேட்டார் காளமேகம்.

அதற்க்கு சிவபக்தர் " ஏன் இல்லை? ஆட்டுக்கோன் என்றீரே! என்று கேட்டார்.

ஆமாம்! சொன்னேன்! பாட்டின் முழுப் பொருளையும் நீர் அறிய வில்லை.. சொல்கிறேன் கேளும்..

"மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் இடையர் தலைவனான கண்ணனின் தங்கையான உமை, வடமதுரையை விட்டு வந்து , ஆடவ அரசனான (ஆட்டுக்கோன்) சிவபெருமானுக்கு மனைவியானாள், அதோடு மட்டுமில்லாமல் வழியில் போவோர் வருவோரை எல்லாம் தலையில் குட்டிக்கொண்டு நிக்க வைக்க, ஒரு தந்தத்தை உடைய கணபதியை (ஒரு கோட்டானை) பெற்றாள், அப்படி பெற்ற உமாதேவி மணிகள் அணிந்த சிறிய இடையை (சிற்றிடைச்சி) உடையவள் ஆகவே இருக்கிறாள்" என்று கூறி முடித்தார்.

சிவபக்தருக்கு மகிழ்ச்சியடைந்து, "கவி என்றால் இதுவன்றோ கவி" என்று புகழ்ந்தார்...



Post a Comment

9 comments:

  1. காளமேகப் புலவர் சிலேடை பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று படித்து இருக்கிறேன்... எங்க தமிழ் வாத்தியார், பாடத்தில் இல்லாத அவரோட பாடல்களை கூட படித்து காட்டி பொருள் கூறுவார் ...சுவாரஸ்யம் குறையாமல் சொல்வார்..

    இப்புலவர் யாரையாவது திட்டும் போது கூட நகைச்சுவையாக திட்டி பாடுவாராம்...

    ReplyDelete
  2. வியப்ப்மிகு பகிர்வு ... மிக ரசித்தேன்.

    ReplyDelete
  3. சிவபெருமானின் குடும்பத்தையே
    ஒரு வழி செய்துவிட்டாரே மனிதர்!
    :)
    பாடலுடன் தங்களின் கதை விளக்கமும்
    ரொம்ப அருமை!

    ReplyDelete
  4. அழகு கவிதை!

    - ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete
  5. Rasithen. Arumayaaga irunthathu. Neenga enna Pazhamai pesi nanbaraa ?

    ReplyDelete
  6. பழமைபேசி இந்த பெயரை இப்பொழுதுதான் உங்கள் மூலமாக கேள்விப் படுகிறேன்... அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..

    பழமையின் சிறப்பை அறிவதும், தெளிவதும் தவறில்லையே...

    ReplyDelete
  7. Kaalamega pulavar ivar kanavil athigam varuvaar.
    Avarathu pakkam ungalukkaaga.
    http://maniyinpakkam.blogspot.com/

    ReplyDelete
  8. காளமேகம் பற்றி காண http://natarajadeekshidhar.blogspot.com/2010/01/blog-post_29.html
    &
    http://natarajadeekshidhar.blogspot.com/2010/04/blog-post.html
    கருத்து கூறுங்கள்.

    ReplyDelete
  9. ரசிக்கும் படியான பதிவு. (ஆட்டுக்கோன் என்றால் ஆடல் அரசனா, ஆடவ அரசனா?)

    ReplyDelete