Sunday, 17 October 2010

எலுமிச்சம் பழமாகும் பாம்பு..

"பெரியவிடமே சேரும் பித்தர்முடி ஏறும்
அரியுண்ணும் உப்புமே லாடும் - எரிகுணமாம்

தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம்."


பெரியவிடமே சேரும் - பாம்புக்கு அதிகமான விஷம் இருக்கும். அது, பித்தனான சிவபெருமான் தiலியல் ஏறி இருக்கும். அரி என்பது காற்று, பாம்பு காற்றைக் குடித்து உடலைத் தேற்றிக் கொள்ளும். பாம்பை அடித்துக் குற்றுயிராய் விட்டுவிட்டால் அது காற்றைக் குடித்து உடலை வளர்த்துப் பிழைத்துக் கொள்ளும். மேலாடும் - தலையைத் தூக்கி மறுபடியும் படமெடுத்து ஆடும். எரிகுணம் ஆம் - மிகவும் சினம் கொள்ளும் இயல்புள்ளது.எலுமிச்சம்பழம், பெரிய இடமே சேரும் - பெரிய மனிதர்களைச் சந்திக்கும் போது, கையுறையாகக் கொடுப்பதற்கு எலுமிச்சம்பழம் பயன்படும். பித்தர் முடி ஏறும் - பைத்தியம் பிடித்தவர்களின் தiலியல் தேய்க்கப் பயன்படும். அரியுண்ணும் - அறுக்கப்படும். உப்பு மேலாடும் - உப்பிடப்பட்டு ஊறுகாயாகும். எரிகுணம் ஆம் - புண் அல்லது அரித்த இடத்தில் தேய்த்தால் எரிச்சலை உண்டாக்கும். இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் ஆகும்.

காளமேகம் எலுமிச்சம்பழத்துக்கும் பாம்புக்கும் இணை வைத்துப் பாடியதை எல்லோரும் பாராட்டினர்

இதேபோல்,

யானையையும் ஆமணக்குச் செடியையும் ஒப்பிட்டு இன்னொரு பாடலைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காளமேகம் பாடினார்.

"முத்திருக்கும்கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் - எத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை ஆம்."


ஆமணக்கு, எண்ணெய் ஆட்டுதற்குரிய முத்துகளை உடையதாய் இருக்கும். காற்றில் அது தன் சிறிய கொம்புகளை அசைக்கும். தடித்த தண்டுகளையுடைய கிளைகளை ஏந்தி வளரும். முத்திருக்கும் காய்களைக் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்.மால் யானையின் விளைந்த தந்தத்தின் முத்திருக்கும் என்பார்கள். அது அல்லாமமல் தந்தத்தின் அடிப்பாகத்தில் முத்துக்களால் ஆன மாலையை அழகுக்காகவும் கௌரவத்திற்காகவும் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்தத் தந்தத்தின் துணை கொண்டு பெரிய மரங்களைத் தூக்கிவரும் கொம்பசைக்கும். அந்தத் தந்தங்களை இங்கும் அங்குமாய் அசைத்த்படி ஆடிக்கொண்டே நிற்கும். நிமிர்ந்து நிற்கும் வாழைமரத்தின் பழுத்த குலைகளைச் சாய்த்து வீழ்த்திச் சாப்பிடும். இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் ஆமணக்கும் யானை ஆகும்.

இதைக் கேட்ட நண்பர்கள் காளமேகத்தை புகழ்ந்தனர்..



Post a Comment

2 comments:

  1. காளமேகத்தின் கற்பனைத் திறனுக்கு ஒரு அளவே இல்லையா. மிக அருமை.

    ReplyDelete
  2. கவி.காளமேகத்தை கண்ணுறுந்தோறும் வியப்பொடு மகிழ்ச்சியும் விளைதல் எல்லோர்க்கும் இயல்பே.

    அருமையான இடுகை.
    பாம்புக்கு, எலுமிச்சைக்கு, ஆமணக்குக்கு, யானைக்கு என்று தனித்தனியாக பத்தி பிரித்து போட்டால், நன்றாக புரியும்போது, சுவை மேலும் கூடுமென நினைக்கிறேன்.

    ReplyDelete