Saturday, 14 May 2011

நிறைவும்! மறைவும்!



நகைக் கடையின் கண்ணாடிப் பெட்டியில் வெல்வெட் துணியில் பொதியப் பட்டு கண்ணை கவர்ந்து கொண்டிருந்த இரத்தினக் கல்லைப் பார்த்துக் தெருவில் கிடந்த கூழாங்கல் ஒன்று பொறாமைப்பட்டது.

அந்த ரத்தினத்தைப் போல நானும் ஒரு கல்தானே, எனக்கு ஏன் மதிப்பில்லை?. இப்படி தெருவில் கிடக்கிறேனே என ஓலமிட்டது. இதைக் கேட்டு பக்கத்தில் கிடந்த கடப்பாரை சிரித்துக் கொண்டே சொன்னது...!

ஏ கூழாங்கல்லே! இத்தனை காலமாய் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் மிதித்துப் போகும்படி இந்த தெருவில் கிடக்கிறாய் ஆனால் இரத்தினக் கல் அப்படியில்லை, நிறைந்து வளர்ந்து பூரித்து இரத்தினமாகும் வரை அது வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னை தானே உருவாக்கிக் கொண்டிருந்தது என்றது.

அப்படியென்றால் ...? என்று இழுத்த கூழாங்கல்லைப் பார்த்து கடப்பாரை அழுத்தம் திருத்தமாய் சொன்னது..

“நிறைவாகும் வரை மறைவாக இரு!, மறைவாக இருக்கும் நிறைவுக்குதான் எப்போதும் மரியாதை”



Friday, 29 April 2011

பயனில்லை...


எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒன்று ஒதுக்குபுறமாய்க் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு ஒன்று கவலையுடன் பார்த்தது.

பின் அது பசுவைப் பார்த்து "முன்பெல்லாம் உன்னை வீட்டுக்காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே, புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே, இப்போதெல்லாம் திரிம்பிக் கூடப் பார்ப்பதில்லயே ஏன்?" என்று சோகமாய்க் கேட்டது..

"பயனில்லை அதனால் பார்ப்பதில்லை" என்று சொல்லிய பசு..

பெருமூச்சுடன் சொன்னது..

"மடியில் பாலும் இல்லை
மதிக்க ஆளும் இல்லை"



Wednesday, 27 April 2011

பணிவு..


மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு.

"இந்தத் தெருவிளக்குக் கோழையாய் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா" என்றது காக்கை.

நீண்ட காலமாக தெருவின் ஓரத்திலேயே நின்ற தென்னைக்குக் கோபம் வந்துடவிட்டது.

"கூர்ந்து கவனி, தெருவில் ஒளியைப் பாய்ச்சித் தொண்டாற்றிக் கொண்டே பெருமையால் தலைவீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு"

என்ற தென்னை,

மீண்டும் "புரிகிறதா" என்ற தொனியில் காக்கையைப் பார்த்துவிட்டு, பிறகு அது சொன்னது...

"பணிவு வேறு
குனிவு வேறு"