Monday, 26 November 2012

ஒட்டா! ஒரு மதி கெட்டாய்!


ஒரு சமயம் உறையூரிலே குலாத்துங்க சோழன், தன் சமஸ்தான வித்துவானான ஒட்டக்கூத்தரும் பட்டத்தரசியும் பாண்டி நாட்டிலிருந்து சீதனமாக வந்த புகழேந்திப்புலவரும் தொடர்ந்து வர, பாதசாரியாய் உலாவரும்போது வீதிகளிலொன்றில் ஒரு வீட்டுத் தெரு திண்ணையில் இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒளவையார், சோழனைக் கண்டவுடன் ஒருகாலை மடக்கிக் கொண்டனர். அருகிற் புகழேந்திப்புலவர் இருக்கிறதைப் பார்த்தவுடனே மற்றக் காலையும் மடக்கிக் கொண்டார். அவர்களை அடுத்தாற் போல வந்த ஒட்டக்கூத்தரைக் கண்டவுடனே இரண்டு கால்களையும் நீட்டினர். 

இதனைக் கண்ணுற்ற ஒட்டக்கூத்தர் அவமானமும் சீற்றமும் மூண்டவராய், ஒளவையாரை நோக்கி, "ஓ கிழவி! இவ்வாறு என்னை அவமதித்தது என்னை? எனக் கேட்க, அதற்கு ஒவையார், "அரசர் கிரீடாதிபதி என்பதால் அவருக்கு ஒரு காலையும், புகழேந்திப்புலவர் ஒரு மகா கவி என்பதால், அவருக்காக இரண்டு காலையும் மடக்கினேன், நீரோ, கல்வி நிறைவில்லாத வீண்புலமை பாராட்டுமொரு மூடர் என்பதால் இரண்டு கால்களையும் நீட்டினேன்" என்று சொல்லி, "உண்மையாகவே, நீரும் புகழேந்தியாரைப் போல ஒரு சிறந்த கவியாயின் சோழரையும் அவர் நாட்டையுஞ் சிறப்பித்துச் சந்திரனுக்குப் பெயராகும் ஒரு பதத்தை ஒரு பாவின் ஈற்றடியில் மூன்றிடங்களில் பிரயோகப்படுத்திப் பாடும் பார்ப்போம்" என்று சொனன்னார். 

ஒட்டக்கூத்தர் அவ்வாறே தம் அரசனாகிய சோழனையே பாட்டுடைத் தலைவனாக கருதி, நற்றாய் இரங்கல் துறையில்,

"வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகலைக் கிழித்துமழைத் துளயோ டிறக்குஞ் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டா கோபாலா!
பள்ளை மதிகண்டு இப்பேதை பெரிய மதியும் இழந்தாளே!"

என்று ஒரு பாட்டுப் பாடினார். இதைக்கேட்ட ஒளவையார், ஒட்டக்கூத்தரை நோக்கி, "உம் பாவில் ஒரு மதி குறந்ததே!" என்ற பொருளின் சிலேடையாக,

"ஒட்டா! ஒரு மதி கெட்டாய்!"

என்று கூறிப் பின்னர் புகழேந்தியாரை நோக்கி, "நீரும் அவ்வண்ணமாகப் பாடக்கடவீர்!"  என்றார். அவரும் நற்றாயிரங்கல் துறையிலேயே,

"பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கட் டெறியக் குரங்கள நீர் தனைக்கொண் டறயுந் தமிழ்நாடா!
கொங்கர்க் கமரா பதியளித்த கோவே! ராச குலதிலகா!
வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே!

எனறு ஒரு மூன்று பிறை வரும்படியாகப் பாடினார்.

இதனைக் கேட்டு ஒட்டக்கூத்தர் வெட்கி, அன்று முதலால் கர்வமடங்கியிருந்தார்.